Sunday, July 27, 2008

இலங்கயும் இனக்கலவரங்களும்


1883ம் ஆண்டு தலைநகரமான கொழும்பில் பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும கலவரத்தில் ஈடுபட்டார்கள். பிரித்தானியர்களின் ஆதரவான அதிகாரம் கொண்ட மேலாதிக்க வாதிகளுக்கும், பௌத்த சிங்களப் பேரின வாதிகளுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டது. பிரித்தானியர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக் கலவரத்தை அடக்கினார்கள். இக் கலவரத்தில்த் தங்கள் நன்மைக்காக அதிகாரத்துக்கு வருவதற்கும் - உயர் கல்வி கற்பதற்கும் - கொழும்பைத் தங்கள் தங்கள் பிரதேசமாகக் கருதியவர்களும், மதம் மாறிய யாழ் மேட்டுக் குடியினர்களும் பாதிக்கப்பட்டார்கள்.

இக் கலவரத்தில் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களின் ஆதரவும் இருந்தது. கத்தோலிக்கர்களுக்கு எதிராக இவர்கள் நடந்து கொண்டார்கள். அரசாங்கப் பிரதி நிதிகளாகவும் அரசு சேவையிலும் 1915 ம் ஆண்டு வரை கரையோரச் சிங்களவர்களில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் புரட்டஸ்தாந்து மதத்தை சார்ந்தவர்களாகும்.

சாதாரணமான ஏழைச் சிங்களத் தமிழ் மக்களின் யதார்த்தமான (பிரித்தானிய அரசுக்கும், அதிகார மேலாதிக்கச் சக்திகளுக்கும் எதிராகப் போராட்டங்கள் உருவாகிய காலம்) பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்காக மதம் கொண்ட தேசிய வாதத்தை உருவாக்கினார்கள். இக் கலவரத்தை உருவாக்குவதற்குத் தலைமை தாங்கியவர்கள் அனாகரிக தர்மபாலாவும் ஹரிச்சந்திராவும் ஆகும்.

1914-15 ம் ஆண்டு காலப் பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக்கலவரம் உருவாகியது. அங்காடி வியாபாரத்தின் முரண்பாட்டால் உருவானது. இலங்கை முழுவதிலும் முஸ்லீம்கள் தான் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். இக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பௌத்த சிங்களப் பேரின மேலாதிக்கச் சக்திகளும், யாழ் இந்து மேட்டுக் குடி மேலாதிக்கச் சக்திகளும் ஆகும்.

இக்கலவரம் பிரித்தானியர்களின் ஆட்சிக்குக் குந்தகமாக அமைந்தது. இதனால் அன்று சமூக சீர்திருத்த வாதியாகவும் தொழிற்சங்க முன்னோடியாகவும் சகல மக்களாலும் மதிக்கப்பட்ட சேர். பொன்னம்பலம் அருணாச்சலத்தின் மூலமாக இக் கலவரத்தைச் சமாதானம் செய்து வைத்தார்கள். இச்சமாதானம் சிங்கள முதலாளிகளுக்குச் சாதகமாக அமைந்தது. இதனால் முஸ்லீம் மக்கள் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அனாகரிக தர்மபாலா இம் முஸ்லீம்களைப் பார்த்துத் தென்னிந்தியத் தெருப் பொறுக்கிகள் என்று விளித்தார். இவர் அதேபோல் மலையகத் தமிழ் மக்களைப் பார்த்துத் தென்னிந்தியக் கீழ்ச் சாதிக் கூலிகள் என்றும் விளித்தார். பௌத்த சிங்களப் பேரினவாதிகளும், யாழ் இந்து மேட்டுக் குடி மேலாதிக்க வாதிகளும், மலையக மக்களின் தலைவர்களாக விளங்கிய கங்காணிப் பரம்பரையில் வந்தவர்களும் இந்தப் பொறுக்கித்தனமான வாக்கியத்தைக் கூறுவார்கள். (இக் கங்காணிகள் தான் தென் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இம் மக்களைக் கொண்டு வந்தவர்கள்.)

பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் பரிணாம வளர்ச்சி தான் யு. என். பி. க் கட்சியாகும். யாழ் மேட்டுக் குடித் தலைமையும், கங்காணித் தலைமையும், முஸ்லீம் தலைமையும் யு. என். பி. க் கட்சியின் விசுவாசிகள். (ஓர் உயிர் இரு உடல் மாதிரி)

1890 ம் ஆண்டு தொடக்கம் 1930 ம் ஆண்டு வரையில் தொழிலாளர்களின் இடையே இன ஒற்றுமை பலம் வாய்ந்ததாக இருந்தது. இதற்குப் பொதுவுடைமை வாதிகளினதும், மார்க்சிய இடது சாரிகளினதும் உழைப்பாகும்.

ஏ. ஈ. குணசிங்கா ஏற்படுத்திய இனவாதம் (மலையாளத் தொழிலாளர்களுக்குத் எதிராக) தான் இன்றைய இனவாதமாகும் (தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகப் பரிணர்மித்தது.)

1956 ம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிராக இனக் கலவரம் உருவாகியது.
பண்டாரநாயக்கா தான் ஆட்சியைப் பிடிப்பதற்குக் கூறிய வாக்கியம் தான் அவரை இனவாதியாகச் சித்தரித்தது. சிறி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் உருவான இனக் கலவரம் பண்டா - செல்வா ஒப்பந்தம் மூலம் விஸ்வரூபம் எடுத்தது. இக்கலவரத்தை உருவாக்கியவர் ஜே. ஆர். தான் இதற்கு இராஜரட்ணமும் ஆதரவாக இருந்தார்.

சிங்களம் மட்டு தான் இலங்கை அரச மொழியாக இருக்க வேண்டும் என்று ஜே.ஆர் யு. என். பி க் கட்சி யாப்பில் முதன் முதல்க் கொண்டு வந்தவர். (1944 ம் ஆண்டு.). பின்னர் டொனமூர் கமிசனுக்கு முன்னாலும் வலியுறுத்தியவர். (1947 ம் ஆண்டு).

மார்க்சிய இடது சாரிகள் சம உரிமை என்ற நிலைப்பாட்டைக் கொண்டு இருந்தார்கள். (1890 ம் ஆண்டு தொடக்கம் 1969 ம் ஆண்டு வரை இதன் பின் சுயநிர்ணய உரிமை என்று கூறத் தொடங்கி விட்டார்கள்.)

சிறி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் தமிழ் மேலாதிக்க வாதிகள் சிங்களச் சிறி பொறித்த வாகனத்திலும், இடது சாரிகள் ஆங்கில எழுத்தில் சிறி பொறித்த வாகனத்திலும், பண்டாரநாயக்கா தமிழ்ச் சிறி பொறித்த வாகனத்திலும் பவனிவந்தார்கள்.

யாழ் மேட்டுக் குடிச் சிந்தனையை மையமாக வைத்துத், தேசிய முதலாளித்துவ அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடக்கி இனக் கலவரங்களைப் பௌத்த பேரினவாதிகள் (யு. என். பி.) மூலம் இனக்கலவரங்களை உருவாக்குவார்கள். யு. என். பி. ஆட்சி காலத்தில் அவ்ஆட்சியுடன் சங்கமம் ஆகிவிடுவார்கள்.

யு. என். பி. யின் படுதோல்வி, யாழ் இந்து மேட்டுக் குடித் தலைமையின் தோல்விகள் தான் ஈழப் போராட்டம் ஆரம்பமாகியது. இலங்கையின் தேர்தல் வரலாற்றைச் சரியான முறையில் கணிக்காமல் ஆயுதப் போரட்டத்தை இந்த யாழ் ‘மோட்டுக்’ குடித் தலைமை துடங்கியது அவர்களையே அழித்தது.

1977 ம் ஆண்டு யு. என். பி. ஆட்சி ஸ்த்திரமாக இருப்பதற்கும், உலக முதலாளித்துவம் உலக மயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவற்குற்மாக ஆக இனக் கலவரங்கள் 1977 ம் ஆண்டு தொடக்கம் 1983 ம் ஆண்டுவரை தொடச்சியா நடத்தப்பட்டது. இதன் ஊடாக உலக வர்த்தக வலையத்தை அறிமுகப் படுத்தினார்கள். இங்கு தொழிலாளர்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.

1983 ம் ஆண்டு மிகப் பெரிய இனக் கலவரம் தொடங்குவதற்கான வேலைகளை யு.என.பி க் கட்சியின் முக்கிய தலைமைகள் செயல்ப்பட்டுக் கொண்டு இருந்தது. பிரேமதாச, சிறிமத்தியூ, ரணில், லலித் இவர்கள் இனக் கலவரத்தின் சூத்திரதாரிகள். யாழ் நூலகத்தை எரித்தவர்களும் இவர்கள் தான்.

இச்சமயத்தில் சிறையில் உள்ள ஈழப் போராளிகளைச் சிறை மீட்பது என்ற திட்டத்தை ஒப்பிரேதேவன் மூலம் நடைமுறைப்படுத்தச் சகல ஈழ அமைப்புக்களும் (புலி உள்ப்பட) ஒப்புக் கொண்டு செயல் திட்டத்தில் இறங்கினார்கள். புளொட் சிறையை உடைத்து அவர்களை வெளியில் கொண்டுவருவது என்றும் ஈ.புp.ஆர்.எல.எஃவ் வும் புலிகளும் இலங்கை இராணுவம் வருவதைத் தடுப்பது என்றும், ரெலோ இவர்களை இந்தியாவுக்குக் கொண்டு செல்வது என்ற செயல்ப்பாட்டுத் திட்டத்தில் செயல்ப்பட்டார்கள். வெசாக் அன்று இத் திட்டத்தை அமுல்படுத்துவதாக இருந்தது. 5 நாளைக்கு முன்னர் புலிகள் இத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்கள்.

இதன் பின் இராணுவ முகாங்களில் இருந்த சகல ஈழப் போராளிகளை வெளிக்கடைச் சிறைச்சாலைக்கு அவசர அவசரமாகச் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள் அனைவரையும் சிறையில் வைத்துக் கொலை செய்வது என்று பிரேமதாச மூலம் திட்டம் தீட்டப்பட்டது.

1983 - 07 - 23 ம் திகதி திருநெல்வேலியில் வைத்து 13 இராணுவத்தைக் கொன்றார்கள். இதே சமயம் இலங்கையில் உள்ள பிரதான நகரங்களில் யு.என்.பி. க் குண்டர்கள் இனக் கலவரங்களைத் தொடங்குவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்கள். 24 ம் திகதி இறந்த இராணுவத்தின் உடல்கள் கொழும்புக்குக் கொணடு வரப்பட்டவுடன் இனக் கலவரம் உருவாகியது.

25 ம் திகதி வெலிக்கடைச் சிறைச் சாலையில் வைத்து 25 போராளிகள் கொல்லப்பட்டார்கள். 27 ம் திகதி 18 ஈழப் போராளிகள் கொல்லப்பட்டார்கள். மிகுதியானவர்களை மட்டக்களப்புச் சிறைச்சாலைற்குப் பாதுகாப்புக் கருதி மாற்றப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில்த் தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், இராசுந்தரம், அனபழகன், ரொபேட் போன்றவர்கள் ஆகும். ரெலோத் தலைவர்கள் வெளிவருவதைப் பிரபாகரன் விரும்பவில்லை. இவர்களைக் காட்டிக் கொடுத்தவர் பிரபாகரன் தான்.

இக்கலவரத்தில் அகதி முகாம்களில் (கொழும்பில்) இருக்கும் தமிழ் மக்களை கொல்வதற்கு ஜே. ஆர் திட்டம் தீட்டி இருந்தார். (தமிழ் மக்களைப் பயமுறுத்துவதற்காக) அச்சமயம் சில சிங்கள இளைஞர்கள் செட்டித் தெருவைத் தாக்க முற்ப்பட்டார்கள். (இத் தெருவுக்கு ஜே. ஆர் தகுந்த பாதுகாப்புக் கொடுத்திருந்தார்.) இது ஜே.ஆர்ருக்குக் குழப்பத்தை உண்டுபண்ணியது. ஜே. ஆர் உடனே அவசரகாலச் சட்டத்தை கொண்டுவந்து தமிழ் அகதிகளை (இந்தியாவின் உதவியுடன்) யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார். தமிழ் மேலாதிக்கத் தலைமைகள் இந்தியா சென்று விட்டார்கள். தருமரும், ஆலாலும் இந்தியா செல்லவில்லை. யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிட்டார்கள்.

இதன் பின் ஈழ விடுதலை அமைப்புக்கள் வளச்சியடையத் தொடங்கியது.

Monday, July 21, 2008

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு


சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:

பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.

சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.

சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத்

தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.

தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: விடுதலைப் புலிகள்

[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:34 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

இலங்கையில் அமைதி முயற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஜஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களை மட்டுமே விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர்களான அமைச்சர் எரிக் சொல்கெய்ம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர் ஹன்சன் பெளயர் ஆகியோருடன் வன்னியில் சந்திப்புக்களை மேற்கொள்ள நாம் ஆர்வமாக உள்ளோம், அது விரைவில் நடைபெறும். நோர்வே தவிர்ந்த எந்த நாட்டின் அனுசரணையையும் நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு இலங்கையில் நோர்வே அமைதி முயற்சிகளை ஆரம்பித்திருந்தது.

இதனிடையே, இலங்கையில் அமைதிப் பேச்சுக்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் முகமாக தென்னாபிரிக்கா கடந்த வாரம் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.

அதாவது, இந்தியாவின் பின்னணியுடன் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தென்னாபிரிக்கா அனுசரணை வழங்க முன்வந்திருந்தது.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனுகூலமான சமிக்ஞைகளை தெரிவிக்க வேண்டும் என சிறிலங்காவின் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனை சந்தித்த போது தென்னாபிரிக்காவின் அனைத்துலக அமைதிக்கான செயற்பாட்டாளரும், பிரதி அமைச்சருமான இராதகிருஷ்ண படையாச்சி தெரிவித்திருந்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் தொடர்பாக ஜஸ்லாந்து குடியரசின் அரச தலைவர் ஒலாபு ரங்னர் கிறிம்சன் ஆராய்ந்ததுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களில் அனுசரணைகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் கிறிம்சன் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://puthinam.com

Thursday, July 17, 2008

நிமலன் சவுந்தரநாயகம் கொலைக்கு புலிகள் உரிமைகோரியுள்ளனர்!

நிமலன் சவுந்தரநாயகம் கொலைக்கு புலிகள் உரிமைகோரியுள்ளனர்! . புலிகளின் இணையத்தளம் உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது

- சண்முகபாரதி

2000 ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் நிகழ்ந்த தேர்தலில் நிமலன் சவுந்தரநாயகம் மட்டக்களப்பு மாவட்டத்தில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அத்தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராசசிங்கம் தோற்றுப்போனார். புலிகளால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிமலன் சவுந்தரநாயகமும் புலிகளால் தான் நியமிக்கப்பட்டவர். எனினும் ஜோசப் பரராசசிங்கம் புலிகள் வாயால் இடும் உத்தரவை தலையால் நிறைவேற்றக்கூடியவர். எனவே நிமலன் சவுந்தரநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, தேர்தலில் அவருக்கு அடுத்ததாக வந்த ஜோசப் பரராசசிங்கத்திற்கு வழிவிடும்படி புலிகளால் உத்தரவிடப்பட்டது. ஆனால் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றிருந்த நிமலன் சவுந்தரநாயகம் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த புலிகள் 06.11.2000 இல் நிமலன் சவுந்தரநாயகத்தை தெருவில் வைத்து நாயைச் சுடுவது போல சுட்டுக்கொலைசெய்து ஜோசப் பரராசசிங்கத்தைக் எம்.பியாக்கிவிட்டனர். அந்தக் கொலையை கண்டித்து, நிமலன் சவுந்தரநாயத்திற்கு வாக்களித்த மக்கள் பல ஆர்ப்பாட்டங்களை அந்த நேரத்தில் நடாத்தினர். இதனால் நெருக்கடிக்குள்ளான புலிகள் தாம் அந்தக் கொலையைச் செய்யவில்லையென்றும் இராணுவமே அந்தக் கொலையைச செய்ததென்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு தமது கொலைக்கரங்களை மூடிமறைத்துவிட்டனர். ஆனால் உண்மை ஒருபோதும் உறங்குவதில்லைஎன்று சொல்வார்கள். அதுபோல உண்மை இப்பொழுது வெளிவந்துவிட்டது.

ஜூலை மாதம் 12 ந் திகதி புலிகளின் நிதர்சனம்இணையத்தளம் வெளியிட்ட செய்தியொன்றில் நிமலன் சவுந்தரநாயகத்தை கருணா தான் கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலிகள் கடந்தகாலங்களில் கிழக்கு மாகாணத்தில் செய்த படுகொலைகள் எல்லாவற்றையும் கருணாவின் தலையில் போட்டு தப்பிக்கொள்ள முற்பட்டு வருகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. 2000 ஆண்டில் புலிகள் இயக்கத்தில் கருணா முக்கிய பொறுப்பில் இருந்ததால், புலிகளே நிமலன் சவுந்தரநாயகம் கொலையின் சூத்திரதாரிகள் என்பதை நிதர்சனம்செய்தி இப்பொழுது உறுதிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. தமது கடந்தகால செயற்பாடுகள் எல்லாம் தவறானவை என்பதை புலிகளே மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் போலும்! (ஆனால் அண்மையில் மகேஸ்வரி வேலாயுதத்தை கொலை செய்ததுவரை தொடர்ந்தும் புலிகள் அதையேதான் செய்கிறார்கள்) கருணா அவற்றைச் செய்தது தவறு என்றால், அவர்மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த ஸ்தானம் அவருக்கு கொடுத்து வைத்திருந்தது எதற்காக என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு புலிகளின் சார்பாகவே கருணா பொறுப்பாக இருந்தபடியால் அங்கு கடந்தகாலங்களில் நடைபெற்ற அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் புலிகளின் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். தலை இருக்க வாலைப்பிடிப்பது போல, மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் சில உள்ளுர் மனித உரிமை அமைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு கருணாவை மட்டும் விசாரிக்க வேண்டும் எனக் கோருவதும், அதேவேளையில் புலித் தலைவர்களுக்கு இலங்கை அரசாங்கம் செங்கம்பளம் விரித்து வரவேற்று பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் எனக் கோருவதும் என்ன வகையான மனித உரிமை நடைமுறையோ தெரியவில்லை.

இலங்கையில் கடந்த காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெயரால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களும், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதன் பெயரால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களும் என அனைத்துவகை மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. குற்றவாளிகளில் தமிழ், சிங்களம், முஸ்லீம் என பார்க்கமுடியாது. அந்தவகையில் கருணாவும் நிச்சயம் விசாரிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் 4 ஆண்டுனளுக்கு முன்னர்; புலிகளிலிருந்து பிரிந்து ஜனநாயக அரசியலுக்குத் திரும்பிய அவரை விசாரிப்பதற்கு முன்பாக, இன்னமும் தொடர்ந்து பாசிச கொலைவெறிச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் புலித்தலைமையை கைது செய்து விசாரிப்பது முதன்மையான விடயம் என்பதை இந்த மனித உரிமை ஜாம்பவான்கள் புரிந்து கொள்வது அவசியம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிதர்னத்தில் வெளிவந்த செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருனாவின் அடுத்த இலக்கா? சிறந்த அரசியல்வாதியென புகழாரம் செய்யும் மர்மம் என்ன?.

ஜ சனிக்கிழமை 12 யூலை 2008 ஸ ஜ -வே.பவான் ஸ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடவே அது உருவாக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக அவர்கள் தற்பொழுது விடுதலைப் புலிகளின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.சம்பந்தன் ஒரு சிறந்த அரசியல்வாதி. எனினும், அச்சம் காரணமாக அவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை விரைவில் மாற்றமடையும் எனவும் கருணா தனது செவ்வியில் கூறினார்.

இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடு எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கருணா , இலங்கை, பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொள்வதை இந்தியா விரும்பவில்லையெனவும் கூறியுள்ளார்.அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு சிறந்தவொரு அரசியல்வாதியாக விளங்கவேண்டுமெனத் தான் விரும்புவதாகவும் அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் கருணா மேலும் தெரிவித்தார். தனது பாராளுமன்றா அரசியல் பயண்த்துக்கு முன்னர் கிழ்க்கில் எஞ்சியுள்ளா ஒரே மூத்த அரசியல்வாதியான சம்பந்தனை திடீரென பல்டியடித்து புகழ்ந்ததில் உள்ள் ரகசியம் என்ன? ஏலவே கிழக்கின் மூத்த அரசியல்வாதிகளான அரியசந்திர நேரு, ஜோசப் பரராஜ்சிங்கம், நிமலன்சவுந்தர நாயகம் முதலானோர் கருனாவின் உத்தரவுக்கு அமைய சுட்டுக்கொல்லப்பட்டது தெரிந்ததே. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி எள்ளளவும் அறிந்திராத கருணா அதன் உருவாக்கத்தில் தன்னையும் சேர்த்துக்கொண்டது வேடிக்கையானது.தமிழீழ் விடுதலை புலிகள் இயக்கத்தை உருவாக்கியது தான் தானென்றூ சொன்னாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

2000ம் ஆண்டு நிமலன் சவுந்தரநாயகம் கொலை செய்யப்பட்டபின் வெளியான செய்தி.

இலங்கையில் தமிழ் எம்.பி.சுட்டுக்கொலை
புதன்கிழமை நவம்பர் 8 2000

இலங்கையில் தமிழ் எம்.பி. நிமலன் சவுந்தரநாயகம் செவ்வாய்க்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்றனர்.சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சி சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றவர் நிமலன் சவுந்தரநாயகம்.

இவர் கிழக்கு மட்டக்களப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை மர்ம மனிதர்கள் 4 பேர்சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளும் மோட்டார் சைக்கிளில் வந்துதான் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.மோட்டார் சைக்கிளில் அமைச்சருடன் சென்ற பாதுகாவலர் காயம் அடைந்தார். அவர் உடனடியாக எரவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குஅவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

http://theneeweb.de/

(17th July 2008)

Tuesday, July 15, 2008

ஊடகவியலாளர் அனிதா பிரதாப் "புதினம்" இணையத்தடளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி

அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே!: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் அனிதா பிரதாப் [செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 04:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார்.

"புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை 1984 ஆம் ஆண்டு இந்திய சஞ்சிகை ஒன்றுக்காக முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப். இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் தனது பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், இலங்கையில் தனது ஊடகவியல் அனுபவம் தொடர்பில் "இரத்தத்தீவு" என்ற நூலை எழுதியிருந்தார்.

இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பலவற்றில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம் ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

பேட்டியின் முழுவிவரம் வருமாறு:

இலங்கையில் பரவலடைந்துள்ள வன்முறைகளின் முடிவு எங்கே என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

இலங்கையில் இன வன்முறை என்பது கொடிய வளைவுகளாக அதிகரித்துக்கொண்டே உள்ளன. ஒருகாலத்தில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் காணப்படும். பின்னர், குறையும். பிறகு, மீண்டும் அதிகரிக்கும். இவை உடனடியாக முடிவுக்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படுமானால், இன்னும் அதிகரிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

தற்போது தனக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சிறிலங்கா அரசு கருதுகின்றது. அதனால், அது தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் நாட்டமாகவுள்ளது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச்செய்வதன் மூலம் அவர்களை பேச்சு மேசைக்கு கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அரசு எண்ணுகிறது என்று நான் நினைக்கின்றேன். கடந்த அரசுகளும் இதேபோன்றுதான் செயற்பட்டன. ஆனால், அவர்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை.


"என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்."

அரசு இதனை மறுத்திருக்கின்றது. ஆனால், அது உண்மை என்றால், அரச தலைவரின் உலங்குவானூர்தி அணி மீதான தாக்குதல் பாரதூரமான விடயம். இந்த தாக்குதலானது, சிறிலங்கா அரசின் "இதயம்" வரை அண்மித்து தாக்குதல் நடத்தக்கூடிய சக்தியை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டியுள்ளது.

புலிகளின் இவ்வாறான தாக்குதல்களுக்கு பதிலளிப்பதானால், அவர்களை முறியடிக்கும் முயற்சியில் அரசு இன்னமும் கூடுதலாக செயற்பட வேண்டியிருக்கின்றது.

ஆனால், அவ்வாறான அரசின் பதில் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால்- மக்கள் ஆதரவின் மூலம்- விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பெற்றுக்கொள்வார்கள்.

இலங்கையில் நிலவும் தற்போதைய இராணுவ நிலைமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழந்து விட்டார்கள் என்று கருதுகின்றீர்களா?

ஆம். விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற கருத்துநிலை ஒன்று உள்ளது.

ஆனால், கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், நிகழ்காலம் தமக்கு பாதகமாக அமையும்போதெல்லாம் புலிகள் தமது நடவடிக்கைகளை 'அடக்கி வாசித்துள்ளார்கள்'.

ஆனால், அக்காலப்பகுதியில் அவர்கள் சோம்பல் முறித்துக்கொண்டோ- நேரத்தை வீணடித்துக்கொண்டோ இருப்பதில்லை.

அந்தவகையில், அவர்கள் தற்போது பெரும் தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தம்மை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் எழுந்துவர தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.

பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மிகச்சிறந்ததொரு கெரில்லா அமைப்பு.

ஆனால், நாட்டின் வலிமை குறையும் நேரங்களில், விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக மாறி சமரிட்டார்கள்.

இந்த வழியை 1990 களின் ஆரம்பப் பகுதிகளில் முயற்சித்த பிரபாகரன், இதனைத் தொடரமுடியாது என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளிடம் உள்ள வளங்களைப் பொறுத்தவரை இது மிகவும் விலை மதிப்பானது என்பதையும் விளங்கிக்கொண்டார்.

இராணுவம் எல்லா இடங்களிலும் ஏககாலத்தில் காணப்படும்போது புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக இருந்து, தமது நேரத்தை நடவடிக்கைகளை மீளத்திட்டமிடுவதிலும் தம்மை மீள ஒருங்கமைத்துக்கொள்வதிலும் செலவிடுகின்றார்கள்.

இதனை இராணுவ வெற்றியாக அரசு கருதுவது பாரதூரமான பிழையாகும்.

வானின் நீலத்தை கிழித்துக்கொண்டு வரும் மின்னல் போன்று சுருக்கமாகவும் கூர்மையாகவும் தமது தாக்குதல்களை நடத்துவதில் விடுதலைப் புலிகள் வல்லவர்கள்.

ஆகவே, புலிகளை அடிமட்ட நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று அரசு பிழையான முடிவுக்கு வருவது சரி என்று எனக்குப்படவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தற்போதைய போரில் சிறிலங்கா அரசு தனது இலக்கை அடைந்துவிட்டதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

அரசாங்கம் என்பது போர் தொடர்பாகவே சிந்திக்கக்கூடாது. போரை நான் வெறுக்கின்றேன். போருக்கு ஆதரவளிக்க என்னால் முடியாது. தனது நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துவது தொடர்பாக எந்த ஒரு அரசும் சிந்திக்கவே கூடாது.

ஆனால், இலங்கையில் அது நடைபெறுகின்றது. அரசு, தனது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தனது சொந்த மக்களுக்கு எதிரான- கீழ்த்தரமான- ஒரு போரை நடத்திவருகின்றது.


"இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்."

நான் அரசாங்கத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால், போரை நடத்துவதற்கான கட்டாய நிலைக்கு நான் தள்ளப்பட்டால், அமைதியை கொண்டுவருவதற்கான பேச்சுக்களுக்கு ஒரு கருவியாகவே போரை- கடைசி தெரிவாக- பயன்படுத்தியிருப்பேன்.

அமைதியும் சுபீட்சமும்தான் எந்த அரசினதும் இலக்காக இருக்கமுடியும். போர் என்பதன் அர்த்தம் முடிவு. போர் எனப்படுவது ஒரு நாட்டின் அமைதிக்கும் சுபீட்சத்துக்கும் உறுதி நிலைக்குமான முடிவாகவே இருக்கமுடியும்.

இலங்கையைப் பொறுத்தவரை போர்தான் போருக்கு முடிவாக இருக்கமுடியும் போல தெரிகின்றது. பல தனிநபர்களினதும் குழுக்களினதும் விருப்பத்துக்கு அமையவே போர் தொடரப்படுகின்றது.

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் உடனடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் சாத்தியங்கள் உள்ளனவா?

நிச்சயமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் அல்ல. தமது அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கும் தலைவர்களைக்கொண்ட இரண்டு நாடுகள் இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை பலர் உணரவில்லை. ஆம். இந்தியாவும் அமெரிக்காவும்தான் அவை.

இந்த ஆண்டுடன் அமெரிக்காவில் புஷ் பதவி இழக்கின்றார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுடன் புதிய அரசியல் முன்னணி ஆட்சிக்கு வரவுள்ளது.

ஆகவே, இன்னும் ஒரு வருடத்துக்குள் சிறிலங்காவில் அமைதிப்பேச்சு எதுவும் நடைபெறப்போவதில்லை. தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு வெற்றிடமான காலப்பகுதி.

சிறிலங்கா அரசு, வேகமாகவும் உக்கிரமாகவும் போரில் இறங்கியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். முக்கியமாக, வரப்போகும் மழை காலத்துக்குப் பின்னர் போரை மேலும் தீவிரப்படுத்தும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்திய அமைதிப்படை விவகாரத்துக்குப் பின்னர் இலங்கையில் நேரடியான இராணுவத் தலையீட்டை மேற்கொள்ள இந்தியா தீவிரமாக இல்லை.

ஆனால், பிராந்தியம், பாதுகாப்பு, உபகண்ட உறுதிநிலை ஆகியவை தொடர்பிலேயே இந்தியா, இலங்கை விவகாரத்தில் மிகவும் தீவிரமாகவுள்ளது.

ஆனால், இலங்கையில் அமைதிப்பேச்சுக்களுக்கு அனுசரணை வழங்குமளவுக்கு இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு விருப்பமோ நேரமோ இல்லை.

அதற்காக, இந்தியா முற்றுமுழுதாக இலங்கை விவகாரத்திலிருந்து விலகி விட்டதாக அது அர்த்தமாகிவிடாது. இலங்கையை முழுமையாக போர் சூழ்ந்தநிலை இருக்கக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்மட்டக்குழுவினரின் திடீர்ப் பயணம், அதன்பின்னர் வெளியான இந்தியாவின் இராணுவ உதவி குறித்தான செய்தி ஆகியவை தொடர்பான உங்கள் கருத்து என்ன?

நான் மேற்கூறிய காரணங்களே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். உயர்மட்டக்குழுவினரின் இந்த வருகை வழமையாக நடைபெறுகின்றதொரு பயணமோ அல்லது பொதுமக்கள் தொடர்பான பயணமோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய அரசானது அரசியல் குழப்பநிலைக்குள் சிக்கி, தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை இழந்து செல்லவேண்டிய நிலையில் தேர்தலை எதிர்நோக்கி வங்குரோத்தான நிலையில் உள்ளது என்ற கணிப்பீடு சிங்கள அதிகாரப்பீடத்தின் மத்தியில் உள்ளது என்பது இந்திய அரசுக்கு தெரியும்.

இந்தியாவின் இந்த நிலை சிங்கள ஆட்சிப்பீடத்தின் ஒரு பகுதியினருக்கும் பல 'கண்டுபிடிப்புக்களுக்கு' வித்திட்டிருக்கின்றது. இந்த கண்டுபிடிப்புக்களுக்கு எதிரான- கடுமையான- தனது எச்சரிக்கையை விடுப்பதற்கே இந்திய உயர்மட்டக்குழு அண்மையில் கொழும்புக்கு சென்றிருந்தது.

விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை.

வெகுதூரத்திலுள்ள அமைதி உடன்பாட்டால் இலங்கையில் அமைதிக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில், வரையறைக்குட்பட்ட வன்முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரசும் புலிகளும் சமபலத்தை பேணிக்கொள்ளட்டும். நிலைமை கைமீறிப்போகுமளவுக்கு பாரிய போர் ஏற்பட்டுவிடக்கூடாது.

இதுவே இந்தியாவின் பாதுகாப்புத்தரப்பினதும் வெளிவிவகாரத் தரப்பினதும் இலங்கை தொடர்பான பார்வையும் எதிர்பார்ப்பும் ஆகும்.


"பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்."

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான மேற்கு நாடுகளின் பார்வையில் கொள்கை மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளனவா? கனடாவிலும் இத்தாலியிலும் அண்மையில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், இது தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?

புஷ் ஆரம்பித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரினால், சுதந்திரத்துக்காகப் போராடும் அமைப்புக்கள் உட்பட அனைத்து குழுக்களும் பயங்கரவாத அமைப்புக்கள் என்ற பெயருக்குள் அடக்கப்பட்ட மிகப்பெரிய தவறு இடம்பெற்றிருக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்குமானால், நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பயங்கரமான தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பார். அதேவேளை, மண்டேலா அண்மையில்தான் பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனப்படுவது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளையும் விடுதலை அமைப்புக்களின் நடவடிக்கைகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. நோர்வேயின் பிரதி அமைச்சரும் இலங்கையின் அமைதி முயற்சிகளின் அனுசரணையாளருமான விதார் ஹெல்கிசன் இது தொடர்பில் அருமையான ஆய்வறிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆகவே, உலகின் பார்வையில் விடுதலை அமைப்புக்களும் பயங்கரவாத அமைப்புக்களாக காணப்படுகின்றன. அந்தவகையில், விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களாக சித்தரிக்கப்பட்ட அமைப்புக்களுடன் அமைதிப்பேச்சுக்களை நடத்த மறுத்து பல நாடுகள் கதவடைத்துள்ளன. இந்த நடவடிக்கை விடுதலை அமைப்புக்களை அழித்தொழிக்க முயற்சித்துவரும் அரசுகளின் கைதுகளை பலப்படுத்தியுள்ளன.

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?

தமிழ்மக்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து பக்கபலமாக உள்ளார்கள்.

பயங்கரவாதம் தொடர்பில் பேசும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நாடுகளும் பயங்கரவாதத்துக்கு இதுவரை காலமும் ஒரு வரைவிலக்கணம் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா? அந்தச் சொல்லை விளக்குவதில் அப்படி என்ன கஷ்டம் இருக்கின்றது?

அப்பாவி மக்களை காயப்படுத்துவதோ கொலை செய்வதோ அல்லது அவர்களின் உடமைகளுக்குச் சேதம் விளைவிப்பதோ அவை தொடர்பான எதுவும் பயங்கரவாதமே ஆகும். அப்படியானால், எல்லா நாடுகளும் சேர்ந்து ஏன் இதனை வரைவிலக்கணமாக கொள்ளக்கூடாது.

ஏனெனில், சுருக்கமாக- தெளிவாக- அர்த்தமளிக்கும் இந்த வரைவிலக்கணம் பல நாடுகளுக்கு பயங்கரவாதம் தொடர்பான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்.


"விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை."

பின்னர், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா, நேபாளம், சீனா, பாகிஸ்தான், சிறிலங்கா, எகிப்து எனப் பல நாடுகள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிவரும். இவை அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை நேரடியாகவோ மறைமுகமாககவே தமது தந்திரோபாயமாக பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், இதில் எத்தனையோ இரட்டை வேடங்கள். வானூர்தியில் குண்டுவைத்ததற்காக லிபியாவின் கடாபியை தனது காலடிக்கு கொண்டுவந்துள்ள அமெரிக்கா, முன்னர் ஈரான் வானூர்திக்கு குண்டுவைத்த தனது குற்றத்துக்கு என்ன தண்டனை வைத்திருக்கின்றது?

பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம். கொள்கையற்ற உலக அரசியல் தர்மத்தின் கீழ் அமைப்புக்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படும். பின்னர், அதே தர்மத்தின் கீழ் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்படாவிட்டாலும்கூட, பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா போன்ற அரசுகளே அந்த அமைப்புக்களுடன் மறைமுகமாக பேச்சு நடத்தும். ஆயுதங்கள் வழங்கும். நிதியுதவி செய்யும்.

ஈரானின் அகமட்நிஜாட் அரசை கவிழ்ப்பதற்கு 400 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ள அமெரிக்கா, தான் பயங்கரவாத அமைப்புக்களாக தடைசெய்துள்ள ஈரானிய அமைப்புக்களையே தனது இந்த திட்டத்துக்கு பயன்படுத்துவதாக நியூயோர்க்கர் பத்திரிகையில் சைமர் ஹேர்ஷ் என்பவர் அண்மையில் எழுதியுள்ளார். அமெரிக்கா கடந்த காலத்தைப் போலவே தற்போதும் ஈரானிய பயங்கரவாத அமைப்புக்களுடன்- மும்முரமாக- இணைந்து செயற்பட்டு வருகின்றது.

கொள்கைகளை அரசியல் வென்று வருகின்றது.

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா காண்பிக்கும் போக்கில் தமிழ்நாட்டு அரசு செலுத்தும் செல்வாக்கு என்ன என்று கருதுகின்றீர்கள்?

தமிழ்நாட்டு நிலைமை 80 களில் காணப்பட்டது போன்று இப்போது இல்லை. இந்தியாவும் தமிழ்நாடும் அந்த நிலைமையிலிருந்து மாறியுள்ளன. வன்முறை குழிக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் துன்பப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு, காலநீட்சியால் இந்தியாவில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து- முக்கியமாக மத்திய தர மக்களும் புத்திஜீவிகளும்- சுயநலமுள்ளவர்களாக மாறிவிட்டார்கள்.

எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று நிலையிலேயே இன்று ஒவ்வொரு சராசரி இந்தியக் குடிமகனும் உள்ளான். இந்தியாவிலோ நேபாளத்திலோ ஏன் இந்தியாவின் பின்தங்கிய இடங்களில்கூட என்ன நடைபெறுகின்றது என்பதை அறிவதில் அவர்களுக்கு பெரிய ஆர்வமொன்றும் இல்லை.

இந்தியாவின் சராசரி குடிமகன் ஒருவர் இலங்கை விடயத்தில் காண்பிக்கும் ஆர்வத்திலும் பார்க்க, மன்மோகன் சிங் அதிகம் ஆர்வம் காண்பிக்கின்றார் என்று நான் கூறுவேன்.

அதற்கு ஊடகங்களும்தான் காரணம். ஏனைய நாடுகளில் காணப்படுவதைப் போலவே இந்தியாவிலும் ஊடகங்கள், நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஊடகங்கள் அற்ப விடயங்களான துடுப்பாட்டம், திரைப்படம், நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை போன்றவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

உண்மையான, முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய விடயங்களுக்கு இந்திய ஊடகங்கள் அளிக்கும் முன்னுரிமைக்கும் அவற்றுக்கு உண்மையில் எவ்வாறான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைமைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது.

ஊடகங்களைப் பொறுத்தவரை அவை தனது பயனாளர்களை திருப்திபடுத்துகின்றனவே தவிர சராசரி குடிமகனை அல்ல.

இலங்கை மற்றும் அனைத்துலக நிலைமை குறித்த விடுதலைப் புலிகளின் சிந்தனை, பார்வை தற்போது என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

உங்களுக்கே தெரியும் விடுதலைப் புலிகளின் சிந்தனை என்று ஒன்றும் இல்லை. பிரபாகரனின் சிந்தனை மட்டும் தான். அதுவே விடுதலைப் புலிகளின் சிந்தனை.

இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்.

பிரபாகரன் திறமையான இராணுவ திட்டவகுப்பாளர் மட்டுமல்ல. அவர் அரசியலிலும் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்க வல்லவர். அனைத்துலக அரசியல் பற்றிய ஆழமான அறிவு உடையவர். முக்கியமாக, மாறுகின்ற அனைத்துலகத்தின் போக்கு தமிழர்களின் போராட்டத்தை எவ்வாறு நேரடியாக பாதிக்கும் என்பதை புரிந்துகொள்வது தொடர்பில் பிரபாகரனுக்கு தீர்க்கமான ஞானம் உண்டு.

இதனை நாம் முன்னரும் கூறியுள்ளேன். எண்பதுகளில் விடுதலைப் புலிகளும் ஏனைய அமைப்புக்களும் இந்தியாவின் உயர் உதவிகளைப் பெற்றுவந்தன.

"இப்போது நாம் இந்தியாவின் உதவியைப் பெற்றுவந்தாலும் இதே இந்தியாவை எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு காலம் எமக்கு வரும்" - என்று பிரபாகரன் என்னிடம் கூறியிருந்தார்.

இந்தப் பதிலால் திகைத்துப்போன நான் "ஏன்" என்று அவரிடம் கேட்டபோது -

"சுதந்திர தமிழீழம் அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அப்படி அமைந்தால், அது இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் பிரிந்து செல்வதை ஊக்குவிக்கும் காரணியாக அமைந்துவிடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு உண்டு." என்றார்.

அமெரிக்காவின் மனநிலை குறித்தும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும்.

பல நாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா, இலங்கையிலும் அதனைத்தான் செய்கின்றது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பெரும் அழிவுடன் கூடிய பாரிய போரை உலகளாவிய ரீதியில் புஷ் அரசு ஆரம்பித்திருந்தது. புஷ்ஷினது இந்தப் போர் உள்ளவரை தனது இலக்கை நோக்கிய பாதையில் எதையும் அடையமுடியாது என்று பிரபாகரன் உணர்ந்துகொண்டார்.

புஷ்ஷினது ஆட்சி முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைதியாக காத்திருப்பார்கள் என்று 2001 இலேயே நான் எதிர்வு கூறியிருந்தேன். எனது கூற்றுப் பலித்திருக்கின்றது. 2009 ஜனவரியுடன் புஷ் ஆட்சி இழக்கின்றார். அடுத்து, ஒபாமா ஆட்சிக்கு வந்தால், வித்தியாசமான அமெரிக்காவையே நாம் பார்ககமுடியும்.

உலகளாவிய ரீதியில்- கடந்த எட்டு வருடங்களில்- அமெரிக்கா பலமிழந்துள்ளதையும் அதன் பிரபலம் அற்றுப்போயுள்ள நிலைமையையும் நாம் தெளிவாக பார்க்கின்றோம். ஆதிக்க நிலையிலிருந்த அமெரிக்க வல்லரசின் போக்கு இனிவரும் ஆண்டுகளில் பலமிழந்து காணப்படும்.

வர்த்தக நெருக்கடிகள், ஆப்கானிலும் ஈராக்கிலும் மேற்கொண்ட குழப்பான போர் நடவடிக்கை, மனதளவில் சோர்ந்துபோயுள்ள நாட்டுமக்கள் போன்ற விடயங்களினால் அமெரிக்கா பெரிய சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது. அத்துடன், மீண்டும் எழுச்சி கொள்ளும் ரஷ்யா, புத்தெழுச்சி கொள்ளும் சீனா, இந்தியா, பிறேசில் ஆகியவையும் அமெரிக்காவுக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன.

21 ஆம் நூற்றாண்டில் வித்தியாசமான உலகத்தை பார்க்கப்போகின்றோம் என்பதையே இவை கோடி காட்டுகின்றன.

இந்த உலக அரசியல் மாற்றங்களை மதிப்பீடு செய்து, அடுத்த ஆண்டுதான் பிரபாகரன் தனது நகர்வினை மேற்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பான செய்திகளை தவிர்க்கம் மேற்குலக ஊடகங்கள் குறித்து அவற்றுடன் இணைந்து பல காலம் பணியாற்றி வருபவர் என்ற ரீதியில்- நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

மேற்குலக ஊடகங்கள்- முக்கியமாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா- தமது அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக கருதும் செய்திகளையே கவனத்தில் கொள்கின்றன. அதுதான், அவர்கள் ஆப்கான் மற்றும் ஈராக் குறித்த செய்திகளை கவனிக்கின்றார்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினை என்பது மேற்குலக ஊடகங்கள் சார்ந்த அரசுகளுக்கு முக்கியமான விடயம் அல்ல.

அங்குள்ள ஊடகங்கள் அரச அமைப்பின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே, அதில் அவர்கள் பிழை விடமாட்டார்கள். அதற்காக அங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறமாட்டேன். ஏனைய நாடுகளை விட அங்கு அதிக ஊடக சுதந்திரம் உள்ளது.


"பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம்."

ஆகவே, வெளிவிவகார கொள்கைகள் மற்றும் இராணுவ- அரசியல் விவகாரங்கள் என்று வரும்போது அந்த நாட்டு அரசுகளுடன் இந்த ஊடகங்கள் மிக நெருக்கமாகவே செயற்படுகின்றன.

அந்த நாட்டு அரசுகளும் தமது போர் மற்றும் வெளிவிவகார இலக்குகளை அடைவதற்கு இந்த ஊடகங்களை மறைமுகமான கருவியாக பயன்படுத்திக்கொள்கின்றன.

ஈராக் போரின் ஆரம்பத்தில் அதனை மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பது இதற்கு நல்ல உதாரணம். புஷ்ஷினது பிரசாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு வாந்தி எடுத்தது போலவே அப்போது மேற்குலக ஊடகங்கள் செயற்பட்டன.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள அடக்குமுறை குறித்து ஊடகவியலாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?

வளர்ச்சியடைந்த சமூகங்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை பார்த்துக்கொண்டு பொறுமை காக்கவே கூடாது. நாட்டின் குடிமக்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்ட இந்த ஊடக அமைப்புக்கள், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் எல்லைகள் தாண்டிய ஊடக இயக்கம் மற்றும் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தமது முறைப்பாடுகளை பதிவுசெய்ய வேண்டும். அப்போதுதான், இந்த அமைப்புக்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கமுடியும்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் குழுக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் அடிப்படை கடமை.

அதேவேளை, அரசியலில் தலையிடாமல் தனது பணியைச் செய்வது ஊடகவியலாளரின் அடிப்படைக் கடமை. இப்போதெல்லாம், ஊடகவியலாளர்கள் கட்சிகளின் பேச்சாளர்களாக செயற்படும் நிலைமை அதிகரித்துவிட்டது. கட்சி அங்கத்தவராக இருந்துகொண்டு தான் செய்யவந்த பணியைச் செவ்வனே செய்யமுடியாது. இப்படியான ஊடகவியலாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும்- பொய்களையும்- அவிழ்த்து விடுகின்றனர். கட்சி சாராமல் உண்மையாக, நேர்மையாக செயற்படுவது ஊடகவியலாளனின் அடிப்படை கடமை.

நீங்கள் மீண்டும் இலங்கை செல்லவுள்ளீர்களா? இல்லை என்றால் ஏன்?

இல்லை. நான் அங்கு செல்வதாக இல்லை. நான் உங்களுக்கு முன்னர் கூறியது போன்று ஊடகங்களுக்கு இலங்கையில் நாட்டம் இல்லை.

ஆனால், என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

எனது வாழ்க்கையில் நிறைவேறாமல் உள்ள சில கனவுகளில் அதுவும் ஒன்று.

எமது காலப்பகுதியில் உள்ளதொரு மிக முக்கியமான கெரில்லாத் தலைவர் பிரபாகரன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

அவரது மனதை எந்த எழுத்தாளரையும்- ஊடகவியலாளரையும்- விட நான் அதிகம் புரிந்துகொள்வேன் என நினைக்கிறேன்.

பிரபாகரனின் வாழ்கை வரலாறை தமிழ்மக்கள் மட்டுமல்லாமல் முழு உலகமும் ஆழமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் அவர்களை ஈர்க்கும் வகையிலும் நான் எழுதுவேன்.

http://puthinam.com/full.php?2b1Voqe0decYo0ecAA4o3b4A6DB4d3f1e3cc2Am